தீபாவளியை முன்னிட்டு 22 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால், சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, நவம்பர் 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில், கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர் மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
இதுதவிர நவம்பர் 3, 4, 5, 6ம் தேதிகளில் தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் வரை இயக்கப்படவுள்ளன.
எனவே மொத்தம் 22 ஆயிரம் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு தீபாவளியில் மொத்தம் 5.35 லட்சம் மக்கள் பயணம் செய்தனர். எனவே அதே அளவிலான மக்கள் இம்முறையும் எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.