சீனாவின் குன்மிங் நகரில் இருந்து கொல்கத்தாவிற்கு புல்லட் ரயில் சேவை தொடங்க ஆர்வமாக இருப்பதாக இந்தியவுக்கான சீன தூதர் Ma Zhanwu தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகம், போக்குவரத்து, பொருளாதாரம், முதலீடு தொடர்பான கருத்தரங்கம் மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இந்தியாவுக்கான சீன தூதர் Ma Zhanwu, தென் மேற்கு சீன நகரமான குன்மிங் நகரிலிருந்து, கொல்கத்தாவிற்கு புல்லட் ரயில் சேவை தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும் அது தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த் புல்லட் ரயில் சேவை சீனாவின் குன்மிங் நகரில் இருந்து வங்காளதேசத்தின் தாகா, சிட்டகாங் மற்றும் மியான்மரின் மண்டேலே ஆகிய நகரங்கள் வழியாக கொல்கத்தாவிற்கு இடையே அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தவிர்க்க முடியாத பொருளாதார சக்திகளாக மாறியுள்ளதாகவும், இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்தாலும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி பாதைக்கு திரும்பமுடியாத வகையில் வளர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த புல்லட் ரயில் சேவை மூலமாக சீனாவில் இருந்து ஒரு சில மணி நேரங்களில் கொல்கத்தாவை அடையலாம் என்றும், இந்த பாதை முழுவதும் பொருளாதார மண்டலங்கள் உருவாகும் சூழல் ஏற்படும் அதன் மூலம் அப்பகுதிகள் பெரும் வளர்ச்சி அடையும் என்றும் சீன தூதர் Ma Zhanwu தெரிவித்தார்.