திங்கள், 24 செப்டம்பர், 2018

நாஸ்கா கோடுகள் : நீடிக்கும் மர்மம் September 24, 2018

Image

நேர் கோட்டில் ஏதாவது இருந்தால் அதனை பார்த்து பிரம்மிப்படையாதவர்கள் இருக்கமாட்டார்கள். நடுவானில் பறந்துகொண்டிருக்கும்பொழுது மரங்களோ, கட்டடங்களோ ஒரே சீராக இருப்பதை பார்த்தாலே நம் மனதிற்குள் ஒரு சிறு மகிழ்ச்சி உருவாகிவிடும்.

வலுவான தொழில்நுட்பங்கள் கொண்ட தற்பொழுதைய காலகட்டத்தில் இது போல் நேர் கோட்டில் கட்டடங்களோ சாலைகளோ கட்டுவது என்பது மிகவும் எளிது. ஆனால், எந்தவித தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத காலத்தில் இதுபோல் நேர்கோட்டில் மிகப்பிரம்மாண்டமான கோடுகளை வடிவமைத்திருப்பது ஆராய்ச்சியாளர்களிடையே மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.



பெரு நாட்டில் உள்ள நாஸ்கா பாலைவனத்தில் சுமார் 400 கி.மீ சுற்றளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இந்த நாஸ்கா கோடுகள். அருகில் இருந்து பார்த்தால், நீண்ட பாதை போல மட்டுமே காட்சியளிக்கும் இந்த கோடுகளை வானத்தில் இருந்து பார்த்தால் மிக பிரம்மாண்டமான பறவைகள் போலவோ, குரங்கு போலவோ சிலந்தி போலவோ காட்சியளிக்கும்.



எதனால் இதுபோன்ற கோடுகள் உருவாக்கப்பட்டன? அந்த காலத்திலேயே எப்படி இதுபோன்ற நேர் கோடுகளை வடிவமைப்பது சாத்தியம் என்பது போன்ற பல்வேறு மர்மங்களும் தேடுதல்களும் இந்த நாஸ்கா கோடுகளின் பின்னால் இருந்த வண்ணம் இருக்கிறது. பெரு நாட்டை சேர்ந்த தொல்பொருள் வல்லுநர் ஒருவரால் 1926ம் ஆண்டு இதுபோன்ற பிரம்மாண்ட கோடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், 1930ம் ஆண்டில் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த சில மக்களே இந்த நாஸ்கா கோடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தனர். 



நாஸ்கா கோடுகள், கி.மு. 700களில் நாஸ்கா மக்களால் கட்டப்பட்டது என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாஸ்கா பகுதியில் உள்ள பாறைகள் ஒருவிதமான இரும்புத்துருவின் வண்ணத்தில் இருப்பதால், அதன் மேற்பரப்பை அகற்றினால், பழுப்பு நிறத்தில் இருக்கும் மண் தெரியும். அப்படி உருவாக்கப்பட்டவை தான் இந்த நாஸ்கா கோடுகள். வெள்ளம், சூறாவளி என பல இயற்கை பேரிடர்கள் வந்தபொழுதும், சுமார் 2000 ஆண்டுகள் இந்த கோடுகள் நிலைத்திருப்பது மிக ஆச்சரியமான ஒன்று.



வேற்றுகிரக வாசிகளிடம் தொடர்பு கொவதற்காகவும், கடவுளிடம் தொடர்பு கொள்வதற்கும், தண்ணீர் பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் நாஸ்கா கோடுகள் வடிவமைக்கப்பட்டதாக சிலரால் நம்பப்படுகிறது. இந்த கோடுகளில் நிறைந்துள்ள ஆச்சரியங்களும் மர்மங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பெர்முடா முக்கோணம் போன்ற மர்மங்கள் நிறைந்த இந்த உலகத்தில், இந்த நாஸ்கா கோடுகளும் விடை தெரியாத மர்மமாகவே இருக்கிறது.