தற்பொழுதைய காலத்தில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு வீட்டில் ஒரு தொலைபேசி இருந்த காலம் சென்று தற்பொழுது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருக்கிறது.
அந்த அளவிற்கு செல்போன் பயன்பாடு மனிதர்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால், செல்போன் பயன்படுத்துவதற்கு ஒரு கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும், தொழில்நுட்பத்தில் அதி முன்னேற்றம் அடைந்துள்ள அமெரிக்காவில் உள்ள ஒரு பகுதியில் இவ்வாறான தடை இருக்கிறது.
அமெரிக்காவின் தெற்கு விர்ஜினியா பகுதியில் உள்ள கிரீன் பாங்க் (Green Bank) என்னும் இடத்தில் கதிர்வீச்சுகளை வெளியேற்றக்கூடிய பொருட்களான செல்போன் மற்றும் வைஃபை பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 143 நபர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் அரசு சார்பில் அமைத்துக்கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசிகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
எதற்காக இந்த கட்டுப்பாடு?
அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ரேடியோ தொலைநோக்கி ( Radio Telescope) தான் இந்த கட்டுப்பாட்டிற்கு காரணம். விண்ணில் என்ன நிகழ்கிறது? ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் வாழ்கிறார்களா? என்பதை கண்டுபிடிக்கும் நோக்கில் வானில் ஏற்படும் மிக துள்ளியமான ஒலிகளை கண்டறிவதற்காக அந்த தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட தொலைநோக்கி மூலம் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள ஒலியையும் கண்டறிய முடியும். அந்த செயலிற்கு எந்தவிதமான இடற்பாடும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே செல்போன், வைஃபை, ப்ளூடூத் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், அந்த பகுதியில் வாழ்கின்ற மக்கள் அந்த சூழலுக்கு தக்கவாறு மகிழ்ச்சியுடன் வாழ்வதாக கூறியுள்ளனர்.