source ns7tv
கோட்டைகளின் நகரம் என போற்றப்படுவது பாளையங்கோட்டை. ஆனால் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டையே பராமரிப்பின்றி காணப்படுவது திருநெல்வேலி நகர மக்களை கவலை அடையச் செய்துள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தில், மிக முக்கியமான இடத்தை பெறும் நகரங்களில் ஒன்று பாளையங்கோட்டை. முந்தையை காலத்தில் ஸ்ரீ வல்லபமங்களம் என்ற பெயரில் அழைகப்பட்ட இப்பகுதியில் பாளையக்கார்களின் ஆட்சி நடைபெற்றது. இந்நகரில் 9-ம் நூற்றாண்டை சேர்ந்த, 400 அடி நீளம் 850 அடி அகலம் என நீள் செவ்வக வடிவிலான கோட்டை உள்ளது.
இது வரி வசூல் செய்யவும், படைவீரர்கள் தங்கும் இடமாகவும், கோட்டை கொத்தளம், நீதி வழங்கும் இடமாகவும் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் கோட்டையின் பல்வேறு பகுதிகள் அழிந்துவிட்டன. தற்போது கோட்டையின் எஞ்சிய சிறு பகுதி மட்டுமே உள்ளது. இப்படி மிக முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சின்னங்களை பராமரிக்க அரசு தவறிவிட்டதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் எழுத்தாளர்கள் பற் பாளையங்கோட்டை மக்களும்.
முந்தைய கால ஆட்சி முறை, விடுதலை போராட்ட வரலாறு, கட்டிடமைப்பு, என பல்வேறு தகவல்களை எதிர்வரும் சந்ததியினர் அறிந்துகொள்ள வசதியாக, வரலாற்று சிறப்புமிக்க இத்தகைய இடங்களை பரமாரித்து பாதுகாக்க வேண்டும், என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
அழிந்துபோன பல்வேறு சின்னங்களையும், தொல்குடிகளின் வாழ்வியல் முறைகளையும் வெளிக்கொண்டு வர, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அரசு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாளையங்கோட்டையை மீட்டெடுக்க முன்வர வேண்டும், என்பதே நெல்லை மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.