மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவர் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கீழ மணக்குடி என்ற மீனவ கிராமத்தை சேர்ந்த அன்றோ செல்வகுமார் - ஜென்சி குயின் பிறேனா தம்பதியின் மகன் ஆகாஷ். இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயதிலிருந்தே கராத்தேயில் ஆர்வம் கொண்ட ஆகாஷ், மலேஷியாவில் நடைபெற்ற 16-வது ஓபன் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் வென்றார். இதனையடுத்து சொந்த ஊர் திரும்பிய அவருக்கு பள்ளி ஆசிரியர்கள், ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அரசு தனக்கு உதவிக்கரம் நீட்டினால் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன் என மாணவர் ஆகாஷ் நம்பிக்கை தெரிவித்தார்.