புதன், 1 மே, 2019

ஆறுகள், அணைகளில் குறைந்து வரும் நீர் இருப்பு: குடிநீர் பஞ்சத்திற்கு அச்சாரமா? May 01, 2019

source ns7.tv
Image
கடுமையான வெப்பம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பெரிய நீர்தேக்கங்கள் மற்றும் ஆற்றுப்படுகைகளின் நீர் மட்டம் சராசரி அளவைக்காட்டிலும் 21% குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தெற்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதி மாநிலங்களில் தண்ணீருக்கு நெருக்கடியான நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
மத்திய நீர் வள ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, நீர்நிலைகளின் நீர் இருப்பு மகராஷ்டிராவில் சராசரி அளவைவிட 40% குறைந்துள்ளது, குஜராத்தில் 29%, உத்தரபிரதேசத்தில் 37%, ஆந்திராவில் 84%, தெலங்கானாவில் 28%, தமிழகத்தில் 19%, ராஜஸ்தானில் 6%, சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் 4% சராசரி அளவைக்காட்டிலும் நீர் இருப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிந்து, நர்மதை மற்றும் தென்னகத்தில் வடக்கு புறமாக பாயும் நதிகளை தவிர்த்து பிற நீர் நிலைகளில் சராசரி நீர் இருப்பு கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் குஜராத்தில் உள்ள கட்ச், தப்தி, சபர்மதி நதிகள், தென்னிந்தியாவின் கோதாவரி, கிருஷ்னா, காவிரி, சட்ரீஸ்கர் முதல் ஒடிசா வரை பாயும் மகாநதி ஆகிய நதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நதிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய நீர் வள ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஒருவர், கிடைத்த தரவுகளை காட்டிலும் கள நிலவரம் மோசமாக இருக்கும், மகராஷ்டிரா, ஆந்திரா, குஜராத்தில் உள்ள சிறிய அளவிலான அணைகள் முற்றிலும் வரண்டுவிட்டது. இந்த தகவல்களை மத்திய நீர் வள ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை, அது பெரிய நீர்நிலைகளை மட்டுமே கண்காணிக்கிறது என கூறினார்.