செவ்வாய், 7 மே, 2019

தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் வனவிலங்குகள்! May 07, 2019

source ns7.tv
Image
தண்ணீர் பிரச்னை மனிதர்களுக்கு மட்டுமல்ல; விலங்குகளுக்கும் இருக்கிறது என்பது அவை வனத்தைவிட்டு ஊர்களுக்குள் வரும்போதுதான் பெரும்பாலும் தெரிகிறது. யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீருக்காக படும் பாடு எத்தகையது என்பதை தற்போது பார்க்கலாம்.
கோவை புறநகர் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதிகளில் யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. அண்மையில் இங்கு ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக ஏராளமான மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தண்ணீர் தேடி விலங்குகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரத் துவங்கியுள்ளன.
யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் கனுவாய், மாங்கரை, ஆனைகட்டி ஆகிய வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளுக்கு தண்ணீர் தேடி வர துவங்கியுள்ளதால், மனித - விலங்கு மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வனப்பகுதிகளில் விலங்குகளுக்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள் பராமரிக்கப்படாததே விலங்குகள் ஊருக்குள் வரக் காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.
 
ஊர்களுக்குள் வரும் காட்டு விலங்குகள் நீர் அருந்தும்போது, அவற்றுடன் சிலர் செல்பி எடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை பராமரிக்கவும், அவற்றில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்யவும் வனத்துறை நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அதன்மூலமே வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறாமல் தடுக்க முடியும் என்கின்றனர்.