புதன், 8 மே, 2019

சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் அளித்து வரும் நீர் எவ்வளவு தெரியுமா? May 08, 2019

source ns7.tv
Image
தற்போதைய நிலவரப்படி சென்னையில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வாரியம் அளித்து வரும் நீர் விநியோகம் பற்றிய தகவல். 
சென்னை மாங்காடு பகுதியை அடுத்த சிக்கராயபுரம் கல்குவாரிகளில் இருந்து 90 நாட்களுக்கு தினமும் 30 கோடி லிட்டர் நீர் எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மூன்று குட்டைகளில் இருந்து நாள்தோறும் வெறும் 30 மில்லியன் லிட்டர் மட்டுமே நீர் பெறப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியில் இருந்து நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதை உயர்த்தும் திட்டம் இருந்தாலும் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல ஊராட்சிகளுக்கும் வீராணம் ஏரியில் இருந்து தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் அதிகமான நீரை எடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள். 
மீஞ்சூர் மற்றும் நெமிலி கடல்நீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைக்காக சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதை தவிர, திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், போதுமான நீர் இல்லாத காரணத்தினால் சில கிணறுகளில் மட்டும் தினமும் 3 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
மொத்தமாக கிடைக்கும் நீரை வைத்து, சென்னை வாழ் மக்களுக்கு நாளொன்றுக்கு 850க்கும் அதிகமான லாரிகளில் சுமார் 8000 நடைகள் வீதம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை மழை கை கொடுக்காத பட்சத்தில், இதே நிலை நீடித்தால் ஜூன் மாதத்தில் சென்னையின் குடிநீர் தேவைக்காக மாநகராட்சி 50 மி.லிட்டர் மட்டுமே விநியோகம் செய்ய முடியும்.
இணைப்பு மற்றும் கிளை கால்வாய்களை தூர்வாரி புனரமைப்பு செய்தால் கூடுதலாக நீரை தேக்கலாம் என்பதே கனிம வள ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.