அசாமில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு பயணமான விமானப்படை விமானம் ஒன்று ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமின் ஜோர்ஹத் பகுதியில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான Antonov An-32 ரக விமானம் ஒன்று இன்று மதியம் 12.25 மணியளவில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மெச்சுகா என்ற பகுதிக்கு பயணத்தை தொடங்கியது. இதில் 8 ஊழியர்களும், 5 பயணிகளும் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.
சுமார் 32 நிமிடங்கள் தரைத்தள அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த இந்த விமானம் பகல் 1 மணியளவில் திடீரென தரைத்தளத்துடனான கட்டுப்பாட்டை இழந்தது.
ஆள் அரவமற்ற தொலைதூர பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதிகள் மீது பறந்துகொண்டிருந்த விமானம் மாயமானதை அறிந்த விமானப்படையினர் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த பகுதியின் சீதோஷ்ன நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் விமானத்திற்கு ஏதேனும் பாதிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.’
இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் வான் எல்லையில் மாயமாகியுள்ள AN-32 விமானத்தை தேடும் பணியை விமானப்படை முடுக்கிவிட்டுள்ளது. விமானப்படையின் Sukhoi-30, C-130 விமானங்கள் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் இருந்து அந்தமானுக்கு 32 பேருடன் புறப்பட்ட AN-32 ரக விமானம் திடீரென மாயமான நிகழ்வில் தேடுதல் வேட்டைக்கு பலன் கிடைக்காமல் 32 பேரும் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.