உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிகள், பாஜகவை எதிர்த்து கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது.
அதிக தொகுதிகளை கைப்பற்றுவதுடன் நாட்டின் அதிக மக்களவை தொகுதிகளை அடக்கிய உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜகவிற்கு அச்சுறுத்தலை இக்கூட்டணி ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்களால் கருதப்பட்ட நிலையில் அதற்கு நேர்மாறான முடிவுகளே அக்கூட்டணிக்கு கிடைத்தது. 64 தொகுதிகளை பாஜக வென்ற நிலையில், பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும் மட்டுமே வெல்ல முடிந்தது.
நீண்ட காலமாக எதிரிகளாக வலம் வந்த இக்கட்சிகள் இரண்டும் கடந்த ஆண்டு உ.பியில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது தான் பழைய கசப்பை மறந்து கைகோர்த்தன. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகும் இக்கூட்டணி தொடரும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் அக்கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. சிறுபான்மை வாக்கு வங்கியை கொண்ட மாயாவதி கட்சியின் வாக்குகள் சமாஜ்வாதி கட்சிக்கு சென்ற நிலையில், அகிலேஷ் யாதவ் கட்சியின் பெரும்பான்மை பெற்ற யாதவ் இன வாக்குகள் பகுஜன் சமாஜுக்கு சரியாக பரிமாறப்படவில்லை என்று குற்றச்சாட்டினை பகுஜன் சமாஜ் முன்வைத்தது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இது குறித்த பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாயாவதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மாயாவதி இடைத்தேர்தலை எந்த கட்சியின் துணையும் இன்றி தனியாக சந்திக்க தயாராகுங்கள் என பேசியதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்ற அக்கட்சியின் கொள்கையும் இந்த முறை மீறப்படலாம் என தெரிகிறது. கடந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத பகுஜன் சமாஜ் இம்முறை 10 தொகுதிகளை வென்றது அக்கட்சிக்கு புது தெம்பை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கூட்டணி பலத்தை நம்பியிருக்காமல் தனித்து களம் காண மாயாவதி முயல்வதாக கருதப்படுகிறது.
இதன் மூலம் கட்சியை பலப்படுத்த அவர் முயல்வதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் கட்சியை பலப்படுத்த அவர் முயல்வதாகவும் கூறப்படுகிறது.