மும்மொழிக்கொள்கை, இந்தி திணிப்பு என்று பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய புதிய கல்விக்கொள்கை வரைவுத் திட்டத்தில் பல பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
➤கஸ்தூரி ரங்கன் குழு அளித்துள்ள தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியப் பரிந்துரைகளில், முதற்கட்டமாக ஐந்தாம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் எட்டாம் வகுப்பு வரையிலும் தாய்மொழிவழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
➤மாணவர்களின் கல்விச்சுமையைக் குறைக்க புத்தகங்களில் உள்ள பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது
➤பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கல்வியைக் கற்காமல், கல்விசார் பாடத்திட்டங்களாக இசை, கலை, கைவினை, விளையாட்டு, யோகா, சமூகசேவை உள்ளிட்டவைகளும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
➤3 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு கல்வி உரிமைச்சட்டத்தை நீட்டிக்கவும் மத்திய அரசை கஸ்தூரி ரங்கன் குழுக் கேட்டுக்கொண்டுள்ளது.
➤கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை துரிதப்படுத்த வேண்டும், பள்ளிக்கல்வியை வேலைவாய்ப்புக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
➤தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும், கல்வி என்பது 'லாபத்திற்காக அல்ல' என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு முக்கிய அம்சங்கள் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
➤தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
➤மாணவர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் தேர்வுகள் எழுதலாம்;. மதிப்பெண்களை உயர்த்த மறுதேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் திறனை உறுதிப்படுத்த, தரமற்ற ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனங்களை மூடிவிட்டு, ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லூரிகளோ, பல்கலைக் கழகங்களோ திறக்கப்படலாம் என கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது.
➤ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறனை உயர்த்த 4 ஆண்டுகால ஒருங்கிணைந்த பி.எட் படிப்பே குறைந்தபட்ச தகுதியாக இருக்க வேண்டும்.
➤மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். குழந்தைப்பருவ பராமரிப்பு முறைகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும். பள்ளிகள் வெறும் பள்ளிகளாக மட்டுமல்லாமல் கல்வி வளாகங்களாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு பரிந்துரைகள் கஸ்தூரி ரங்கன் குழுவின் வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
➤21ம் நூற்றாண்டின் வாழ்க்கைத் திறன்களை அடிப்படைத் திறன்களாக வளர்தெடுக்கும் முறையில் கற்பித்தலை ஊக்குவிக்க வேண்டும்.
➤சீரமைக்கப்பட்ட NAAC தலைமையிலான அங்கீகார சூழல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். மொழிபெயர்ப்பிற்காக Indian Institute of Translation (IITI) என்ற புது கல்வி நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றும் வரைவு அறிக்கையில் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களை மறுகட்டமைக்க 3 வகையான பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
1. உலகளவிலான ஆராய்சி அடிப்படையில் கற்பித்தல்
2. ஆராய்ச்சிகளுக்கு பங்களிக்கும் வகையில் கற்பித்தல்
3.மிஷன் நாலந்தா, மிஷன் தக்ஷஷீலா அடிப்படையில் இளங்கலை கல்லூரிப்படிப்பை தரம் உயர்த்துதல் போன்றவை அந்த பரிந்துரைகள் ஆகும்.