நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய நோன்பு. கடந்த 30 நாட்களாக நோன்பை கடைப்பிடித்த இஸ்லாமியர்கள் நேற்று மாலை பிறை தென்பட்டதை தொடர்ந்து, ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகையை இன்று உற்சாகமாக கொண்டாடினர். டெல்லி ஜூம்மா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இதேபோல் அகமதாபாத், மும்பை, கோரக்பூர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ரம்ஜானையொட்டி, இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
ரம்ஜானையொட்டி இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அட்டாரி - வாகா எல்லையில், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருடன் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
இதேபோல் மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், வங்கதேச பாதுகாப்பு படை வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறியதுடன், ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
புதுச்சேரியில் பழமைவாய்ந்த மீரா பள்ளிவாசலில் 300 கிலோ பிரியாணி தயாரிக்கப்பட்டு, அனைத்து மதங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்திலும் வழக்கமான உற்சாகத்துடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. சென்னை கோடம்பாக்கம் மஸ்ஜித் அஹமதியா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், ஏராளமானோர் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் கடற்கரை பகுதியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஈத்கா பள்ளி மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈஷா பள்ளி வாசல், சின்னக்கடை தெரு பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து ஜமாத்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன