ரயில்வே துறையில் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும் பேச வேண்டும், என்ற அறிவிப்பு கண்டனத்திற்கு உரியது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் வரி உயர்வை கண்டித்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில், வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இந்த வரி உயர்வை வாபஸ் பெறக் கோரிக் கோரி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில், இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி எம்.பி.,யாக கனிமொழி தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவர் கலந்துகொள்ளும் முதல் ஆர்ப்பாட்டம் இது, என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டுக்கான கட்டணங்களை, தூத்துக்குடி மாநகராட்சி உடனே திரும்பப் பெற வேண்டும், என்று கனிமொழி வலியுறுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழகத்தில் தண்ணீரைத் காசு கொடுத்து வாங்கும் அவல நிலை இருக்கிறது என்றால், மக்கள் எந்த அளவிற்கு கடினமான சூழலில் இருக்கிறார்கள் என்பதை, அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும், ரயில்வே துறையில் கட்டுப்பாட்டு அறைகளில் இருக்கும் அதிகாரிகள், ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும், மாநில மொழிகளில் உரையாடக் கூடாது, என்ற உத்தரவு கண்டனத்திற்கு உரியது என்றார். இது தொடர்பான பிரச்னையை நாடாளுமன்றத்தில் திமுக நிச்சயமாக எழுப்பும், என்றும் கனிமொழி கூறினார்.