வெள்ளி, 14 ஜூன், 2019

அணுக்கழிவு குறித்து கூடங்குளம் அணுமின் நிலையம் விளக்கம்...! June 14, 2019



Image
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 2022ம் ஆண்டுக்குள் பயன்படுத்திய எரிபொருளை சேமிப்பதற்கு அணுக்கழிவு மையங்களை அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என கூடங்குளம் அணுமின் நிலையம் விளக்கம் அளித்துள்ளது. 
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கூடங்குளம் அணு உலை ஒன்று மற்றும் இரண்டில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்கள் மட்டுமே அணுக்கழிவு மையத்தில் சேமிக்கப்படும் என்றும், மற்ற அணு உலை கழிவுகள் இங்கு கொண்டுவரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி, அதன் வழிகாட்டுதல் அடிப்படையில் தான் அணுக்கழிவு மையம் அமைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அணுக்கழிவு மையத்தால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலம், நீர் ஆகியவை மாசுபடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அணு கழிவுகளில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், அணுக்கழிவுகளை எதிர்காலத்தில் மற்ற உபயோகங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கூடங்குளத்தில் அமையவுள்ளதைப் போன்றே, இந்தியாவில் மேலும் இரண்டு இடங்களில் அணுக்கழிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிபொருள் சேமிப்பு கிடங்கு அமைப்பது தொடர்பாக அடுத்த மாதம் பத்தாம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.