source: ns7.tv
மறைந்த நெல் ஜெயராமனின் குடும்பத்தினரிடம் இருந்து அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை வாங்கி அதனை விதைத்து அதிக மகசூல் ஈட்டிவருகிறார் இயற்கை விவசாயி ஒருவர்.
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பாவனி கால்வாயில் பாசனத்துக்காக திறக்கபடும் நீரை கொண்டு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது. இந்த நீரைக் கொண்டு கீழ்பாவனி பாசன விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், தென்னை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
வழக்கமான விவசாயத்தை தவிர்த்து, ஈரோடை அடுத்த மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்ற விவசாயி, தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி நெல் ரகத்தையும் மற்றும் ஒரு ஏக்கரில் கிச்சிலி சம்பா நெல் ரகத்தையும் பயிரிட்டு அசத்தி வருகின்றார்.
பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டுள்ள ஒரு ஏக்கர் பகுதியைச் சுற்றியும் விஷ பூச்சிகள், நெல் பயிர்களை தாக்கும் பூச்சிகள் வண்டுகளை தவிர்த்து, மகரந்த சேர்கையில ஈடுபட்டு, உணவு சங்கிலி தொடரில் தொடர்புடைய வண்டுகள் பூச்சிகளை நெல் பயிர்களிடம் அழைத்து வர துலுக்க சாமந்தி, கொட்டா மரம், மக்கா சோளம், தட்டப்பயிறு, உளுந்து, காட்டுகம்பு, சோளம் ஆகியற்றை பயிரிட்டுள்ளார். இதனால் நெல் பயிர்கள் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டு நன்கு செழிக்கும் என்று கூறுகின்றனர்.
மறைந்த நெல் ஜெயராமனின் குடும்பத்தினரிடம் இருந்து பாரம்பரிய நெல் விதைகளை வாங்கி அதனை கொண்டு எளிய முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயி சேகர், மற்ற விவசாயிகளையும் இயற்கை விவசாயத்திற்கு வரவேண்டும் எனவும் அழிந்து வரும் நெற்பயிர்களை விவசாயம் செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறார்