சனி, 29 டிசம்பர், 2018

குறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை மூடவுள்ளதா தமிழக அரசு? December 29, 2018

Image

source: ns7.tv

தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை மூட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவல், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரால், பாதுகாக்கப்பட்டு வந்த சத்துணவு திட்டத்தை, தற்போதைய அரசு நிறுத்தவுள்ளதா?
தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் என்பது, 1925-ம் ஆண்டு நீதிக்கட்சியால் கொண்டு வரப்பட்டது. ஏழை குழந்தைகளின் நலனுக்காக, சென்னை மாநகராட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம்,  பின்னர் காமராஜர் ஆட்சி காலத்தில், மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
பசியுடன் வாடும் குழந்தைகளுக்கு ஒருவேளை உணவளித்தால், பள்ளியின் பக்கம் எட்டிப் பார்ப்பார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில், கல்வி வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்திய அப்போதைய முதல்வர் காமராஜர் இத்திட்டத்தை விரிவுபடுத்தினார். இத்திட்டத்திற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டும் அப்போதைய அரசு பல தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளிடம் நிதி திரட்டி சிறப்பாக செயல்படுத்தி வந்தது. 
அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், முதல்வராக பதவியேற்றதும் மதிய உணவு திட்டத்திற்கு சத்துணவு திட்டம் என பெயர் சூட்டி, மாநிலம் முழுவதும் பிரபலப்படுத்தினார்.  எம்ஜிஆரின் நடவடிக்கையால் அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் இத்தகைய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. 
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இத்திட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டதால்,  டாஸ்மாக் என்ற தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தைத் தொடங்கி, அதன் வாயிலாக வருமானம் கிடைக்க செய்து, திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தார்.  பின்னர் முதல்வரான  கருணாநிதியும், ஜெயலலிதாவும் சத்துணவு திட்டத்தை மேம்படுத்தினர். 
நூற்றாண்டை எட்டும் இத்திட்டத்தை தமிழக அரசு நிறுத்தவுள்ளதாக திடீரென தகவல் பரவியது. அதாவது 25க்கும் குறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை மூட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. 
இந்த முயற்சிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலுள்ள சத்துணவு மையங்கள் மூடப்பட்டால், ஏராளமானோரின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதுடன், ஏழை குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அண்மையில் சமூக நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 25 மாணவர்களுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில், சத்துணவு மையங்களை மூடும் எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லையெனவும், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 12ம் வகுப்புகள் வரையும் தனித்தனியாக இயங்கும் சத்துணவு கூடங்களை ஒரே மையமாக மாற்றவே ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அரசின் இந்த அறிவிப்பால் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். எது எப்படியோ கல்வித்துறை தனியார் மயமாகி வரும் சூழலில், சத்துணவு மையங்களை மூடினால், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மக்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பது உண்மையே. சத்துணவு திட்டத்தை தமிழக அரசு என்றென்றும் தொடர வேண்டும், என்பதே அனைவரின் விருப்பம்.