
source ns7.tv
மணப்பெண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பணம் கொடுத்து வெளிநாடுகளில் இருந்து பெண்களை வாங்கும் நிலைக்கு சீன இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இரும்புத்திரை தேசம் என வர்ணிக்கப்படும் சீனாவில், பெண்களுக்கு எதிரான அரசின் பாலின நடவடிக்கைகள், பாலின விகிதாச்சாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடத்தில் இருந்த சீனா, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, முப்பது ஆண்டுகளுக்கு முன் ‘ஒரு குழந்தைக் கொள்கை’ அமல்படுத்தியது. இக்கொள்கையை மீறும் குடும்பங்களுக்கு அரசு உதவிகள் மறுக்கப்பட்டதால், இதனை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர் சீனப்பெண்கள்.
அதே நேரம், ஆண் வாரிசு மீதான விருப்பத்தால், பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கத் தொடங்கியதன் விளைவு, சீனாவில் பெண்களைவிட, 3.3 கோடி இளைஞர்கள் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு புறம், பெருகிவரும் மணப்பெண் பற்றாக்குறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கடத்தல் காரர்கள், அருகில் இருக்கும் வியட்நாம், கம்போடியா, மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து இளம் பெண்களை கடத்தி சீன இளைஞர்களுக்கு விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசும் இதைக் கண்டு கொள்ளாததால், சட்டவிரோத மணப்பெண் வர்த்தகம் கொடிகட்டிப் பறப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கியமான மனிதவளம் தேவை என்ற பேராசையால், மனநலம் குன்றியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று சட்டம் இயற்றிய சீனா. சட்டவிரோத மணப்பெண் கடத்தலுக்கு ஆதரவாக செயல்படுவதன் தாக்கம், இளைஞர்களின் மனநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சொந்த மக்களின் நலனையும், உரிமைகளையும் புறந்தள்ளும் சீனா, பொருளாதாரத்தில் வளர்ந்து எதை சாதித்துவிட போகிறது என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.