திங்கள், 17 டிசம்பர், 2018

அடடே...இப்படியும் ஒரு உணவகமா? மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க புதிய முயற்சி! December 17, 2018

Image

ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள உணவகம் ஒன்று, மாற்றுத்திறனாளிகளை மட்டும் பணியமர்த்தி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.
The Daily Grinds என்ற பெயரில் திவாகர் அரோரா என்பவரால் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் சமையல்காரர், சுத்தம்செய்பவர், கணக்குபார்ப்பவர் என அனைத்து வேலையாட்களும் மாற்றுத்திறனாளிகள் தான். அதிலும் பெரும்பாலானவர்கள் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்.
இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் தனித்துவமான முறையில் வரவேற்று, திருப்திகரமான உணவு வழங்கி வருகின்றனர். வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான உணவை மெனு கார்டில் தொட்டு காண்பித்து வாங்கிக்கொள்ள வேண்டும்.
இதுபோன்று பல வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கூடிய இந்த உணவகத்திற்கு பெரும்பாலானோர் வந்து செல்கின்றனர். மேலும், ஒரே வகையான உணவுப்பொருட்களை தினமும் வழங்காமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தன் உணவுப்பட்டியலை மாற்றிக்கொள்வது இந்த உணவகத்தின் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களை போல நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த உணவகத்தை ஆரம்பித்ததாகவும் இந்தியாவில் பல இடங்களில் இதுபோன்ற உணவகத்தை தொடங்கவேண்டும் என்பதே தனது லட்சியம் என தன் கனவுகளை பகிர்ந்துகொண்டார் உரிமையாளர் அரோரா.