source ns7.tv
தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த பொருட்களுக்கு அந்த தடை என்பது பற்றி பெரும்பாலானோர் சந்தேகமாக கேள்வி எழுப்பிவருகின்றனர். அதனை பற்றிய செய்தி...
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என்னென்ன?
➤உணவகங்களில், உணவுப் பொருட்களை கட்டுவதற்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்கால் ஆன தெர்மாகோல் தட்டுகள் மற்றும் குவளைகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
➤உள்பக்கம் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குவளைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
➤மேலும், தண்ணீர் பாக்கெட்டுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், உணவை பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொட்டலங்கள், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது இலவச இணைப்பாக தரப்படும் பிளாஸ்டிக் தூக்கு பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
➤இதேபோன்று பிளாஸ்டிக் கொடிகளையும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுக்களை உபயோகப்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
➤டீக்கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் தேநீர் குவளைகள்,இளநீர், குளிர்பானங்களை உறிஞ்சிக் குடிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறிஞ்சுக் குழல்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.