முன் அறிவிப்பின்றி மின்வெட்டு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகள் பல்வேறு வினோதமான வாக்குறுதிகளை அளித்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். எங்களுக்கு வாக்களித்தால், ரேஷன் பொருட்களே வீடு தேடி வரும். குடிநீர் தட்டுப்பாடே இல்லாத மாநிலமாக மாற்றிக்காட்டுவோம்.என பல கட்சிகள் வாக்குகளைக் கவர கவர்ச்சியான திட்டங்களை தங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யும். இவற்றுக்கு மத்தியில், சத்தமின்றி ஒரு திட்டத்தை அமல்படுத்தியுள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.
மின் வெட்டு ஏற்பட்டால் மாநில அரசே இழப்பீடு வழங்கும் என்பது தான் அந்த அறிவிப்பு. மின்சாரத்திற்காக பொதுமக்களே அரசுக்கு கட்டணம் செலுத்தி வந்த சூழ்நிலையில், இது என்ன புதிய அறிவிப்பு என புருவத்தை உயர்த்திப்பார்க்கின்றனர் டெல்லி வாசிகள். நீங்கள் வியப்படைய ஒன்றும் இல்லை என கூறிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன் அறிவிப்பில்லாமல் 1 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டால் 50 ரூபாய் இழப்பீடாக மாநில அரசு வழங்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிற்காமல் மற்றொரு இன்ப அதிர்ச்சியாக, இரண்டு மணி நேரத்தைத் தாண்டி மின்வெட்டு நீடித்தால், இழப்பீடு தொகை 100 ரூபாயாக வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். முதல் இரண்டு மணி நேரத்துக்கு 50 ரூபாயும் அதையடுத்து நீடிக்கும் ஒவ்வொரு மணி நேர மின்வெட்டுக்கு 100 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக 5,000 வரை இழப்பீடுத்தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தைப் பலரும் வரவேற்றுள்ளனர். நீண்ட நாள் ஆலோசனைக்கு பிறகு, இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்தாற்போல டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை மாற்றி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் பச்சைக்கொடி காட்ட, விரைவில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தலில் வாக்குகளைக் கவர, புதிய புதிய அறிவிப்புகளை கட்சிகள் தூசு தட்டி அறிவித்து வருகின்றன. விவசாய கடன் ரத்து என்ற காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பு, நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில், 3 மாநிலங்களை காங்கிரஸ் கட்சி வசமாக்க பெரும் உதவி புரிந்தது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள மின்வெட்டுக்கு இழப்பீடு திட்டம் டெல்லி வாசிகளை குதூகலப்படுத்தியுள்ளது. தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டிய பல விஷயங்களை முறையாக செயல்படுத்தவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து மக்களின் பாராட்டுகளைப் பெறும் வகையில், ஒற்றைத் திட்டத்தை அறிவித்து மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் டெல்லி முதல்வர்.
மின் மிகை மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளைத் தாண்டி, தமிழகமும் எப்போது இது போன்ற அறிவிப்பை கேட்கப் போகிறது என்பதே தமிழக மக்களின் காத்திருப்பு.