source: ns7.tv
அரை நூற்றாண்டை கடந்துவிட்டாலும் மக்கள் மனதில் ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது கீழ்வெண்மணி படுகொலை சம்பவம். என்ன நடந்தது என்பதை பற்றி தற்போது விரிவாக காண்போம்.
1968 டிசம்பர் 25ம் நாள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாய கூலிகளைத் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் இருந்த "ராமையன்" என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 44 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில் அக்குடிசை எரிந்து சாம்பலானது. கர்ப்பிணிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். கூலியாக அரைப்படி நெல் உயர்த்திக் கேட்டதற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூர நிகழ்வு இது.
இந்தசம்பவத்தில் 106 பேர் கைதானார்கள். "இது சாதிய மோதல்" என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. "அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல" என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையானார்கள்.
வெண்மணி படுகொலை சம்பவம் நடந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உயிர் பிழைத்தவர்கள், காயம்பட்டவர்கள் சிலரை கீழ்வெண்மணி கிராமத்தில் தற்போது பார்க்கமுடிகிறது. அப்பொழுது இருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தற்பொழுதும் கூலித் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்.
கீழ்வெண்மணிப் படுகொலையை நினைவு கூறும் விதமாக வருடாவருடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கட்சிபாகுபாடின்றி வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வெண்மணி படுகொலை சம்பவம் தங்களால் மறக்க முடியாத கோர நிகழ்வு என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
கீழ்வெண்மணி படுகொலை சம்பவம் அரை நூற்றாண்டை கடந்தாலும், இந்த சம்பவம் கிராம மக்களின் மனதில் ஒரு அழியாத வடுவாகவே இருந்து வருகிறது.