வியாழன், 13 டிசம்பர், 2018

பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு உதவும் தேர்தல்கள்.. புதிய பொருளாதாரத்தை நோக்கி இந்தியா..! December 13, 2018

Image

பெட்ரோல், டீசல் விலை, 57 நாட்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய செய்தது மட்டுமல்லாமல், தேர்தலுக்கும், பெட்ரொல் டீசல் விலைக்கும் தொடர்பு இருக்குமா என்பது போன்ற சிந்தனைகளை தூண்டியுள்ளது.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் வரை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த பெட்ரோல் விலை கடந்த சில நாட்களாக குறைந்தவண்ணம் இருந்தது. அதிக ரூபாய் குறையாவிட்டாலும், சில காசுகள் குறைந்தது மக்களை மகிழ்ச்சியடைய செய்தது.  ஆனாலும் அப்பொழுதே தேர்தலுக்காகத்தான் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுகிறது என மக்களிடையே பேச்சு எழுந்தது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பெட்ரொல் விலை, சில நாட்களுக்கு குறைக்கப்பட்டும், சில நாட்களுக்கு உயர்த்தப்பட்டும் விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் மாத தொடக்கத்தில், அதிகபட்சமாக 87.33 ரூபாய் என விற்கப்பட்ட பெட்ரோல் விலை நாளுக்கு நாள் சில காசுகள் குறைக்கப்பட்டு நேற்று 72 ரூபாய் 82 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

பல நாட்களுக்கு பிறகு சுமார் 70 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள். இதேபோல டீசல் விலையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டு 80 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட டீசல் தற்பொழுது 68 ரூபாய் வர குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இத்தனை நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல் விலை 12 அதிகரித்து 72 ரூபாய் 94 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இதுபோன்று விலை அதிகரித்துள்ளது மக்கள் மனதில் பலவிதமான குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. 


சர்வதேச பங்குச்சந்தை, பொருளாதாரம் உள்ளிட்டவை மூலமாக பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டாலும், தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் முடிவுகள் எதிரொலி காரணமாக பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது நடைபெற்ற 5 மாநில தேர்தல் காரணமாக இந்த விலை மாற்றம் காணப்பட்டாலும் இதற்கு முன்னதாக கர்நாடகா சட்டசபை தேர்தல் சமாயத்திலும் இதுபோன்று நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
source: Ns7.tv