வெள்ளி, 21 டிசம்பர், 2018

நாடாளுமன்ற தேர்தலில், கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்க கூடிய சக்தியாக மாறுவார்களா நெட்டிசன்கள்? December 21, 2018


Image

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறப் போகிறது என்பதை சமூக வலைதளங்களே தீர்மானிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் களம், தொழில்நுட்பத்தை மிகவும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சமூக வலைதளங்களான, பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் போன்றவையே அடுத்து ஆட்சி அமைக்க உள்ள கட்சிகளை தீர்மானிக்கப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
இதற்கு காரணம், கடந்த 5 ஆண்டுகளில் நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களாக மாறியுள்ளனர். கட்சிகளின் தேர்தல் அறிக்கை, அரசியல் கட்சிகளின் பரப்புரை, எந்த வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என சகல விஷயத்தையும் கைகளுக்குள் பெறக் கூடிய வகையில் நவீன தொழில்நுட்பம் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இதனால், வாக்காளர்களைக் கவர அரசியல்வாதிகளும் இணைய பிரசாரத்தை தொடங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 15 கோடியாக இருந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில், 45 கோடியாக  அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமானவர்கள் ஃபேஸ்புக்கையும் 20 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸ்-அப் செயலியையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பிரமாண்ட பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, அதன் மூலம் மக்களிடம் தங்களின் கட்சி கொள்கைகளை தெரிவிப்பதற்கு மாற்றாக, சமூக வலைதளங்கள் மூலமாக எளிதாக கட்சிகள் பிரசாரத்தை மேற்கொள்ள கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. 
நடந்து முடிந்த, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 90 ஆயிரம் வாட்ஸ் அப் குழுக்களையும், பாஜக 15 ஆயிரம் வாட்ஸ் அப் குழுக்களையும் ஏற்படுத்தி தீவிரமாக பிரச்சாரம் செய்தது. விவசாய கடன் தள்ளுபடி செய்யும் விஷயத்தை காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் கொண்டு சென்றதாலேயே அக்கட்சி அபரிமிதமான வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. 
இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா என சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களின் பட்டியல் மிக நீண்டது. இதனால், சுதாரித்துள்ள அரசியல் கட்சிகள்,  தங்களுக்குள் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளை ஏற்படுத்தி தங்களுக்கான பிரச்சாரத்தை சமூக தளங்களுக்காக வேகமாக முன்னெடுத்து செல்லத் தொடங்க உள்ளன.
இதனால், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில், கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்க கூடிய சக்தியாக நெட்டிசன்கள் விளங்குவார்கள் என்று கணிக்கப்படுகிறது. 

source: ns7.tv