வியாழன், 27 டிசம்பர், 2018

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மண்பாண்ட பொருட்கள்...! December 27, 2018

Image

வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலாகவுள்ள நிலையில், அதற்கு மாற்றாக மண்பாண்ட பொருட்கள் தயார் செய்யும் பணி நெல்லையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பண்டைய காலத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட மண் சட்டி, மண் அடுப்பு, தண்ணீர் குவளை ஆகியவற்றை உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக ஈயம், சில்வர் என மாறி தற்போது எந்த பொருட்களை எடுத்தாலும், பிளாஸ்டிக் தான் முதன்மை தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக நிலத்தில் மாசு ஏற்படுவதுடன், பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. 
சூடான உணவுகளை பிளாஸ்டிக் பைகளில் வாங்கி பயன்படுத்துவதால் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் பரவும் நிலை ஏற்படுவதாகவும், ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர். அனைத்து துறைகளிலும் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருளாக மாறியதன் காரணமாக வரும் 1 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக நெல்லை- மேலப்பாளையம் குறிச்சியில் மண்பாண்டங்கள் தயார் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. 
 பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான தண்ணீர் குடிப்பதற்கும்,  டீ, காபி குடிப்பதற்கும் 100ml முதல் 250ml வரையிலான மண்பாண்டத்தால் வடிவமைக்கப்பட்ட டம்ளர்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. மேலும்,ஐஸ் கிரீம், தயிர் வைப்பதற்கான மண்பாண்ட பானை, 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் ஜக் ஆகியவற்றிற்கு  அதிகளவில் ஆர்டர்கள் வருவதாக கூறுகின்றனர் மண்பாண்ட உற்பத்தியாளர்கள். பிளாஸ்டிக், பேப்பர் கப் வியாபாரம் நடத்தி வந்த வியாபாரிகளும் மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு மொத்தமாக ஆர்டர் கொடுக்க மண்பாண்ட உற்பத்தியாளர்களை நாடியுள்ளனர்.
 
போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினாலும், மண் எடுப்பதற்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இத்தொழிலில் இருந்து மாற்று தொழிலுக்கு சென்ற மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது பிளாஸ்டிக் தடை என்ற அரசின் அறிவிப்பால் மனமகிழ்வோடு மீண்டும் இத்தொழிலை துவங்கியுள்ளனர். பாரம்பரிய மிக்க இந்த மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கினால் இத்தொழிலை எளிதில் தொடர்ந்து நடத்த முடியும் என்பதே மண்பாண்ட தொழிலாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
source ns7.tv