ஞாயிறு, 16 டிசம்பர், 2018

தோடர் பழங்குடியினர் இனத்தில் முதல் பெண் மருத்துவர்! December 16, 2018

Image

source: ns7.tv

நீலகிரி மாவட்டத்தில் தோடர் இனத்தை சார்ந்த முதலாவதாக பெண் மருத்துவராகிய பாரதிக்கு மலைமாவட்ட மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தோடர் இனத்தை சார்ந்த 
பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே இருக்கும் இந்த பழங்குடியின மக்கள் வாழ்க்கை தரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்துவந்தது. இதையடுத்து, அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு உதவிகளை அளித்து வருவதால் தோடர் இன மக்களின் வாழ்க்கை தரம் தற்போது உயர்ந்துள்ளது.

இதனால் தற்போதைய இளைய தலைமுறையினர் பல்வேறு துறைகளில் பட்ட படிப்புகளை பயின்று வருகின்றனர். இந்நிலையில் உதகை அருகே உள்ள தேனாடு மந்தை சார்ந்த மந்தேஷ் குட்டன் மற்றும் நேரு இந்திரா ஆகியோரது மகள் பாரதி பல் மருத்துவ படிப்பை முடித்து தற்போது மருத்துவராகி உள்ளார்.


தங்களுடைய இனத்தை சார்ந்த முதல் பெண் மருத்துவர் என்பதால் தோடர் இன மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல் பெண் மருத்துவரான பாரதிக்கு உதகையில் உள்ள மலை பகுதி மேம்பாட்டு அரங்கில் தோடர் இன மக்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து, பாரதிக்கு தோடர் இன மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பராட்டு தெரிவித்து வருகின்றனர்.