
source: ns7.tv
நீலகிரி மாவட்டதில் தோடர் பழங்குடியின மக்களை தரக்குறைவாக பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உதகையில் உள்ள பவானீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சில போலீசார் தோடர் பழங்குடியின ஆண்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தோடர் பழங்குடியினர், உதகை B1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
மனுவை அளித்த பின்னர் அவ்விடத்தை விட்டு பழங்குடியின மக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது.