source ns7.tv
ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தொலைபேசியில் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் தற்போது அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி தொலைபேசியில் ஒருவரிடம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலாகியது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிப் பிரமுகரான பிரகாஷ் என்பவர் தனது காரில் மாண்டியாவில் உள்ள மைசூரு சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது மதூர் பகுதியில் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் குமாரசாமியிடம் இந்தத் தகவலை உளவத்துறை போலீசார் தொலைபேசி வாயிலாக கூறியதாக தெரிகிறது. அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குமாரசாமி, மிகவும் கொந்தளித்தவராக காணப்பட்டார், அப்போது, “பிரகாஷ் ஒரு நல்ல மனிதர் அவரை கொலை செய்தவர்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லுங்கள், எந்தப் பிரச்சனையும் இல்லை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று அவர் பேசியுள்ளதாக தெரிகிறது. குமாரசாமி ஆக்ரோஷத்துடன் பேசும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அந்த வீடியோ வைரலாகிய நிலையில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவதாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது, இதனால் இது தொடர்பாக விளக்கமளித்து அறிக்கை ஒன்றை தற்போது குமாரசாமி வெளியிட்டுள்ளார்.
அதில் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லுங்கள் என போலீசாருக்கு நான் உத்தரவிடவில்லை, அந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் நான் பேசிவிட்டேன். பிரகாஷை கொலை செய்தவர்கள் ஏற்கெனவே கொலை வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிணையில் வந்து அவர்கள் இக்கொலையை செய்துள்ளனர். இப்படித்தான் பிணை தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
குமாரசாமியின் இந்த பேச்சு கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில் அரசியல் ரீதியாகவும் குமாரசாமியின் பேச்சு பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
source: ns7.tv