source: ns7.tv
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற மஞ்சள் சட்டை போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரான்ஸில் மஞ்சள் ஆடை அணிந்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் பாதுகாப்பு கருதி ஈபிள் கோபுரத்தை அந்நாட்டு அரசு மூடியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் முன்எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல் விலை உயர்வு தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. கடந்த ஒர் ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை 23 சதவீதம் வரை அதிகரித்ததற்கு, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பு நாளடைவில் எழுச்சி போராட்டமாக மாறியது. இதன் காரணமாக, கடந்த சில வாரங்களாக அந்நாட்டு மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டத்தின் போது, பல பகுதிகளில் வன்முறையும் வெடித்தது.
பாரிஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஆர் டி ட்ரோம் நினைவு சின்னமும் சேதப்படுத்தப்பட்டது. பல இடங்களில் கடையடைப்பு போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மேல்நிலை பள்ளி, கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்தனர்.
மக்களின் எழுச்சி போராட்டத்தை கண்டு பிரான்ஸ் அரசு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பெட்ரோல் விலை உயர்வை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைத்திடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டப்படி நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்துவதாக Yellow vest போராட்ட குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்கு மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் என்றும் பெயரிட்டு இருந்தனர். . இதனையடுத்து, பிரான்ஸ் முழுவதும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் 89 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்
தலைநகர் பாரிஸில், ஈபிள் கோபுரம் முன்பாக ஒன்று திரளும் மஞ்சள் உடை மக்கள் கூட்டத்தின் போது மீண்டும் வன்முறை ஏற்படும் அபாயம் உள்ளதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது .
இதனையடுத்து பாரிசிலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இப்போரட்டத்தின் போது ஈபிள் கோபுரம் தாக்கப்படக்கூடும் என கருதி, அதனை மூடுவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் CHRISTOPHE CASTANER அறிவித்ததிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமூக ஊடகங்கள் மூலம் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக எரிக் ட்ரூயெட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணீர் புகைகுண்டு வீசி இந்த போராட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
மக்களின் எழுச்சி போராட்டத்தின் முன்பாக எத்துகைய எதேச்சதிகார அரசும் முடிவில் பணிந்திட வேண்டும் என்பதே கடந்த கால வரலாறு. இதற்கு பிரான்ஸ் அரசும் விதிவிலக்கல்ல.