வியாழன், 20 டிசம்பர், 2018

13 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பைகள் பற்றி விழிப்புணர்வை அளித்து வரும் மதுரை சின்மயானந்தம்! December 20, 2018

Image
source: ns7.tv

பிளாஸ்டிக்கை ஒழிக்க தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க விழிப்புணர்வூட்டும் செயலில் சத்தமில்லாமல் ஈடுபட்டு வருகிறார் மதுரை அண்ணாநகரை சேர்ந்த சின்மயானந்தம். 
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்யக் கோரி பல ஆண்டுகளாக சமூக அமைப்புகள் போராடி வரும் நிலையில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 13 ஆண்டுகளாக தமது பகுதியில் உள்ள மக்களுக்கு பிளாஸ்டிக் பைகள் பற்றி விழிப்புணர்வை சத்தமில்லாமல் அளித்து வருகிறார், மதுரை அண்ணா நகர் பெரியார் தெருவைச் சேர்ந்த பட்டதாரி சின்மயானந்தம். கடந்த 13 வருடமாக தமது கறி கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறார். பாத்திரம் மூலம் கறி வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு நான்கு முட்டைகளை வழங்கி பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து விடுபட புது முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
கறி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் தற்போது பாத்திரம் கொண்டு வருவதால் பிளாஸ்டிக் தேவை குறைந்திருப்பதாக கூறும் சின்மயானந்தம், கறி வாங்க பாத்திரம் இல்லாமல் வரும் வாடிக்கையாளருக்கு டெபாசிட் முறையில் 40 ரூபாய் பெற்றுக்கொண்டு புதியதாக தூக்கு பாத்திரம் கொடுத்துவிடுவதாகவும் தெரிவிக்கிறார். அவரின் இந்த முயற்சிக்கு வாடிக்கையாளர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.
அரசு அறிவித்த பிளாஸ்டிக் தடைக்கு முழுமையான வெற்றி கிடைக்க விழிப்புணர்வு பணிகளை அரசு தீவிரப்படுத்துவதுடன், மக்களும் போதிய ஒத்துழைப்பு அளித்தால் தான் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.