வெள்ளி, 28 டிசம்பர், 2018

சாத்தூர் சம்பவம் போல சென்னையிலும் ஒரு கொடூரம்...கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்டது அம்பலம்! December 28, 2018

Image

source ns7.tv

சாத்தூர் சம்பவம் போல சென்னையிலும் ஒரு கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது அம்பலமாகியுள்ளது. 
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்தப்பட்ட செய்தியின் ரணம் ஆறுவதற்கு உள்ளாகவே, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டதால் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு வந்தாக மற்றொரு பெண் புகார் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் லதா. இந்த பிரச்னை காரணமாக அவரின் சமூக மதிப்பிற்கு பங்கம் வரக் கூடாது என்பதற்காக பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக கருதரித்த லதா, மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். 
4 மாத கர்ப்பிணியாக இருந்த போது ரத்த சோகை ஏற்பட்டதால் ரத்தம் ஏற்றிக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். 
 
கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி, 8 மாத கர்ப்பிணியான லதாவிற்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு எச்.ஐ.வி.க்கான நோய் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர்கள் வழங்கி உள்ளனர். இதற்கான காரணம் கேட்ட போது ரத்தம் ஏற்றும் போது தொற்று வந்து இருக்கலாம் என மருத்துவர்கள் அலட்சியமாக பதில் அளித்தாக கண்ணீர் மல்க தெரிவிக்கிறார் லதா. பிறக்கும் குழந்தைக்காவது இந்த நோய் தொற்று இல்லாமல் குழந்தை பிறக்க சிகிச்சை எடுத்து பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. 
 
இந்த சம்பவத்திற்கு பின் தன் உடன் பிறந்த சகோதரிகள் கூட தன்னை ஏற்றுக்கொள்ள தயராக இல்லை என்றும், மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் தனது வாழ்க்கையே பறிபோய் விட்டதாக கூறுகிறார் லதா. இந்த பிரச்சனை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் கடிதம் எழுதி உள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்த பதிலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். 
 
எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரத்தம் பெறக் கூடாது, அவ்வாறு பெற்று இருந்தால் கூட உரிய பரிசோதனையின்றி அதனை பிறருக்கு செலுத்துவது மருத்துவத்துறையின் அலட்சியமே. அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட 2 கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களின் கவனக்குறைவால் HIV நோயாளிகளாக மாற்றப்பட்டிருக்கும் சம்பவம், அரசு மருத்துவமனையின் மீதான நம்பகத்தன்மையை அசைத்துப் பார்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி ரத்த  வங்கிகளில் பின்பற்றப்பட்டு வரும் பாதுகாப்பு நடைமுறைகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.