வெள்ளி, 28 டிசம்பர், 2018

அடி பணிகிறாரா சந்திரசேகர ராவ்? பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறாரா? December 28, 2018

Image
source: ns7.tv

பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக 3-வது அணியை உருவாக்கும் தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகரராவ் - பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைக்கும் விமர்சனங்களுக்கு என்ன காரணம்? 
நாடாளுமன்ற தேர்தலை நிர்ணயிக்க கூடிய சக்திகளாக - சந்திர சேகர ராவ் - சந்திரபாபு நாயுடு - மு.க.ஸ்டாலின் என தென்னிந்திய தலைவர்களே தற்போதைய நிலவரத்தில் முன்னணியில் உள்ளனர். பாஜவை வீழ்த்தியே தீருவேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சூளுரைத்து காய்களை நகர்த்த, திமுக. தலைவர் மு.க.ஸ்டாலினோ ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து திரிசங்கு சொர்க்கத்தில் காங்கிரஸ் கட்சியை நிறுத்தியுள்ளார். 
இது ஒருபுறம் இருக்க, சந்திர சேகர ராவோ - பாஜக - காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த இடத்தில், சந்திரபாபு - மு.க.ஸ்டாலினின் நிலைப்பாடு வெளிப்படையாக தெரிய, சந்திர சேகரராவோ ஒருவகையில், பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக, செயல்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐதராபாத் அருகே பிரகதி நிவேதனா சபா என்ற பெயரில், ராஷ்டிர சமிதி மாநாடு, சில மாதங்களுக்கு முன்பு பிரமாண்டமாக நடைபெற்றது. அங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ,மேடையில் ஏறிய சந்திர சேகர ராவ் - டெல்லியிடம் சரணடைய மாட்டோம் என ஆவேசமாக பேசி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். ஆனால், அந்த பேச்சில், காங்கிரஸ் கட்சியை மட்டுமே அவர் கடுமையாக விமர்சித்ததாகவும், பாஜகவுக்கு  மௌன சிரிப்பை பரிசளித்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் தெளிவுபட கூறியுள்ளனர். இருப்பினும், பாகஜவுடன் தான் நட்பில் இல்லை என்பதைப் போல் காட்டிக்கொண்ட அவர், சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த தெலங்கானா தேர்தலில் தனித்து போட்டியிட்டு, அபாரமாக ஆட்சியையும் கைப்பற்றினார்.
இதன் உடன் நிகழ்வாக, பாஜக - காங்கிரசுக்கு மாற்றாக, 3-வது அணியை அமைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநில கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசியுள்ளார். இப்படி, கூட்டணி குறித்து அவரின் பேச்சுகளோடு நிறுத்தியிருந்தால் சந்தேகம் எழுந்திருக்காது. 
அடுத்த நகர்வாக, பிரதமர் மோடியையும் அவர் சந்தித்து விவாதித்ததே தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்த சந்திரபாபு நாயுடு, நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில், சந்திர சேகர ராவின் தெலங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி பாஜகவின் 2-வது அணியாக செயல்பட்டு வருவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். வடக்கிற்கு பணிய மாட்டோம் என்று ஆவேசமாக பேசிய சந்திர சேகர ராவ், தற்போது பாஜகவின் வலையில் வீழ்ந்துவிட்டதாகவும், அவர்களுக்காகவே காங்கிரசை வீழ்த்தும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 
ஒன்றுபட்ட ஆந்திராவில் தெற்கில் சந்திராபு நாயுடு என்றால், வடக்கில் சந்திர சேகர ராவ் என்பது தான் அம்மாநில மக்களின் மாறாத நம்பிக்கை. நாடாளுமன்ற தேர்தலிலும் இருவருமே வடக்கின் குரலாகவே ஒலிக்கின்றனர்.  சந்திரபாபு நாயுடு, வடக்கில் காங்கிரசின் குரலாக வெளிப்படையாக காட்டிக்கொண்டாலும், சந்திர சேகர ராவும் தனது சுய ரூபத்தை விரைவில் வெளிப்படுத்துவார் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.