நாட்டில் உள்ள எந்த ஒரு கணினித் தகவல்களையும் கண்காணிக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு முகமை முதல் சிபிஐ வரையிலான நாட்டின் 10 மத்திய அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் முக்கியமான புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு மேலும் அதிகாரம் அளிக்கும் வகையில் தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை எந்த ஒரு கணினியில் சேமித்து வைத்துள்ள தகவல்களை கண்காணிப்பது, இடைமறித்து ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி CBI, அமலாக்கத்துறை (Enforcement Directorate),தேசிய பாதுகாப்பு முகமை (NIA), மத்திய நேரடி வரித்துறை (CBDT), வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI), நாட்கோடிக்ஸ் பிரிவு (Narcotics), உளவுத்துறை (RAW), நுண்ணறிவுப்பிரிவு (IB) போன்ற விசாரணை அமைப்புகளுக்கும், டெல்லியின் காவல் ஆணையருக்கும், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அசாம் பகுதிகளுக்கான சிக்னல் இண்டெலிஜென்ஸ் பிரிவுக்கும் இந்த அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதன் காரணமாக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் எந்த ஒரு கணினியின் தகவல்களையும் இந்த அமைப்புகள் தேசநலன் கருதி உளவு பார்க்கலாம்.
தகவல் தொழில்நுட்பச்சட்டம் 2000-ன், 69(a) பிரிவின்படி நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மையை, குற்றங்கள் தடுப்பு, உள்ளிட்டவைகளை கருதி இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைப்புகளின் சுதந்திரம் பறிபோயுள்ளதாக தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வரும் எதிர்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து மாறுபட்ட கருத்தினை தெரிவித்துள்ளன.
அகில இந்திய சிபிஐ பொதுச்செலளாளரான சீதாராம் யெச்சூரி, ”எதற்காக ஒவ்வொரு இந்தியரும் கிரிமிணல்கள் போன்று நடத்தப்பட வேண்டும்?, ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட தகவல்களை கண்காணிக்க அளிக்கப்பட்ட இந்த அனுமதியானது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஆதார் வழக்கில் வழங்கப்பட்ட நீதிக்கும் எதிரானது” என கூறியுள்ளார்.
இதேபோல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகமது பட்டேல் கூறும்போது, எந்த தொலைபேசி அழைப்புகளையும், கணினித் தகவல்களையும் கண்காணிக்க அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரமானது கவலையளிக்கிறது. இது தவறுதலாக பயன்படுத்தப்பட வாய்ப்பளிக்கிறது என்றார்.
source ns7.tv