நான்கு மணி நேர நீண்ட விவாதத்திற்கு பிறகு முத்தலாக் தடை மசோதா மக்களவை நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மசோதா நிறைவேறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தை சூடாக்கிய முக்கிய மசோதாக்களில் ஒன்றாக முத்தலாக் தடை மசோதா மாறியுள்ளது. திருத்தங்களுடன் கூடிய முத்தலாக் தடை மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தாக்கல் செய்ய, நாடாளுமன்றமே விவாதக்களமாக மாறியது.
மத்திய அரசின் முத்தலாக் மசோதாவிற்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்ததால், திருத்தப்பட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது மத்திய பாஜக... முத்தலாக் கூறும் நபர்கள், உடனடியாக ஜாமின் பெற முடியாது என்பதில் திருத்தம் கொண்டு வந்து, நீதிபதிகளிடம் ஜாமின் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவரது குடும்பத்தினரோ புகார் தெரிவிக்கலாம் என்ற திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மீதான விவாதம் மக்களவையில் தொடங்கிய உடன், காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்தது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விவாதத்தில், முத்தலாக் மசோதாவை, நாடாளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தினர்.
பெரும்பாலும், பாஜகவை கடுமையாக விமர்சிக்காத அதிமுக, முத்தலாக் மசோதாவை கைவிட வலியுறுத்தியது. அக்கட்சியின், அன்வர் ராஜாவின் நாடாளுமன்ற உரை அனைத்துக்கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தது.
நீண்ட விவாதத்திற்கு பிறகு நடந்த முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 245 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவாகியது. இதனால், பெரும்பான்மையுடன் முத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. வாக்கெடுப்பின்போது காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.
மக்களவையில், பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால், முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்பட உள்ளது. மாநிலங்களவையில், பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு, முத்தலாக் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாநிலங்களவையில், முத்தலாக் மசோதா நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
source: ns7.tv