source ns7.tv
தெற்காசியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, சுமார் இரண்டரை லட்சம் உயிர்களை காவு வாங்கியது. அந்த தாக்குதல் நிகழ்ந்து இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள். உலகமே உறைந்து போன ஒரு தினமாக வரலாற்றில் பதிந்தது அந்த நாள். கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த அடுத்தநாள் அது. இந்தியக் கடலோர நாடுகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். சரியாக நள்ளிரவு நேரம். இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில், சுமத்ரா தீவுக்கு கீழே 30 கிலோ மீட்டர் ஆழத்தில், 9.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக சிறியதாய் தோன்றிய அலை ஒன்று, பூதாகரமாய் பெருக்கெடுத்து, தெற்காசிய நாடுகளையே புரட்டிப் போட்டது.
உறங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அதன் வீரியம் உணர சில நிமிட நேரங்கள் நீடித்தன. இந்தியாவில் 9571, இந்தோனேஷியாவில் 94,100, இலங்கையில் 30,196, தாய்லாந்தில் 5,187, மியான்மரில் 90 பேரும், மாலத்தீவில் 75 பேரும், மலேசியாவில் 68 பேரும், சோமாலியாவில் 176 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும் சுனாமிக்கு பலியாயினர்.
உறவினர்கள், நண்பர்கள், உடைமகள் என அனைத்தையும் இழந்துவிட்டு லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளிலும் தவியாய் தவித்தனர்.
சுனாமியால் அதிகம் பாதிப்புக்குள்ளானது தமிழகம் தான். தமிழகத்தில் நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கடலூர், புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுனாமி தாக்குதலில் மீன்பிடி படகுகள் சுக்கு நூறானதால், மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு மீண்டுவர ஒரு சில ஆண்டுகள் வரை ஆனது.
அந்த கோர நிகழ்வு நடந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது, ஆழிப்பேரலை எச்சரிக்கை செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலகளவில் சுனாமி குறித்த எச்சரிக்கையை வெளியிடும் நாடுகளின் தகவல்களில், இந்தியா வெளியிடும் தகவல் மிக சரியானதாக இருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அந்த தகவல்கள் எல்லாம் வெறும் வார்த்தையாகி விடாமல், உண்மையாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. வெறுமனே முன்னெச்சரிக்கை செய்வதில் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டிக் கொள்ளாமல், பாதிப்பு ஏற்படும் என அறிந்தால், அந்த பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என்பதை 2004ம் ஆண்டின் ஆழிப்பேரலையின் சுவடுகள் கற்றுக் கொடுத்திருக்கிறது.