விவசாயம் என்றால் நினைவுக்கு வரும் டெல்டா பகுதியில், தற்போது விவசாயிகளின் நிலை பரிதாபகரமாக உள்ளது. தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்த அவர்களின் வாழ்க்கை, கஜா புயல் சின்னாபின்னமாக்கியுள்ளது. கஜா புயல் தாக்கி 1 மாதம் முடிந்தும் இயல்பு நிலைக்கு திரும்பாத டெல்டா மாவட்டங்கள் ஆனால் மீளா சோகத்தில் விவசாயிகள் இருக்கின்றனர்.
கஜா புயல் தாக்குதலால் திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் பொருளாதார நிலை சூறையாடப்பட்டுள்ளது. போதுமான மழை பெய்யாமல் இத்தனை ஆண்டுகாலம் தாங்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைத்திருந்தும் புயல் அடித்து தங்கள் விவசாயத்தை அழித்து விட்டதாக விவசாயிகள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். ஆனால் அரசு இதனைப் பொருட்படுத்தியதாக தெரியவில்லை என்றும், குறைந்தபட்சம் பாதிப்புகளை முறையாக கணக்கெடுப்பாவது நடத்தியிருக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் பார்வையிட்ட போது, தங்கள் பாதிப்புகளை தெரிவித்ததாகவும், ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். வரி குறைவாக கட்டினால் அரசு பொறுத்துக் கொள்ளுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்தல், பயிர் காப்பீடு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு உடனே எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தாங்கள் தற்கொலை முடிவை நோக்கி தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அறுவடைக்கு காத்திருந்த நிலையில், புயல் அடித்து தங்களை வேதனையில் தள்ளிவிட்டதாக கூறும் விவசாயிகள், தப்பிய பயிர்களைக்கூட புயலுக்குப் பின்பு காப்பாற்ற முடியவில்லை என்றும் வருந்துகின்றனர்.
தமிழர்களின் வயிற்றுக்கு சோறு போட்ட, டெல்டா விவசாயிகளின் வயிற்றில் அடித்து விட்டு சென்றுள்ளது கஜா புயல். விவசாய நிலத்தில் மீண்டும் பயிர் செய்து எப்போது மீளுவோம் என்று ஏங்குகின்றனர், பிறருக்கு உணவிட்ட டெல்டா விவசாயிகள்.
source: ns7.tv