பொதுத்துறை வங்கிகள் இணைப்பு விவகாரம், சம்பள உயர்வு பேச்சுவார்த்தை, அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதிய விகிதங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் நாளையும் (டிசம்பர் 21), வரும் டிசம்பர் 26 அன்றும் அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU), அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்டவை தனித்தனியாக வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதனிடையே கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பொதுவான விடுமுறை நாட்களும் வரவுள்ளதால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் தொடர்ந்து 5, 6 நாட்களுக்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் நாளை வேலை நிறுத்தம் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 600 கனரா வங்கிக் கிளைகள் செயல்பட்டு வரும் நிலையில் ஸ்டிரைக் காரணமாக நாளை தமிழகத்தில் அனைத்து கனரா வங்கிக்கிளைகளும் மூடப்படும் என்றே தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 22, 4ம் சனிக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் அது பொதுவான விடுமுறை தினமாகும், டிசம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
டிசம்பர் 24 திங்கட்கிழமையன்று வழக்கம் போல வங்கிகள் திறந்திருக்கும் என்றாலும் தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் சொந்த விடுமுறையில் செல்லவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
டிசம்பர் 25, செவ்வாய்க்கிழமையன்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதாலும், அதற்கு அடுத்த நாளான டிசம்பர் 26 அன்று மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதாலும் தொடர்ச்சியாக 5 முதல் 6 நாட்களுக்கு வங்கிகள் செயல்பாடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே போல ஏடிஎம் செயல்பாடுகளும் முடங்கும் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.
வங்கி விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை திட்டமிட்டு செயல்பட்டால் சிரமங்களை குறைக்க இயலும்
source: ns7.tv