உள்ளாட்சி தேர்தல் நடத்தும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும், அதனால் அதிகாரிகளை பொறுப்பாக்க முடியாது என அரசுத்துறை செயலாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017 நவம்பர் 17 ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதால், மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்துறை செயலாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், வார்டு வரையறை தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் காரணமாக, தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதற்கு அதிகாரிகளை பொறுப்பாக்க முடியாது எனவும் வாதிட்டார்.
தேர்தல் நடத்தும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு தான் உத்தரவிடப்பட்டதே தவிர, தமிழக அரசு அதிகாரிகளுக்கு அல்ல என குறிப்பிட்டார். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறி சட்டம் இயற்ற மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும், அது நீதிமன்ற அவமதிப்பு செயல் அல்ல எனவும் தெரிவித்தார். அவரது வாதத்தை பதிவுசெய்த நீதிபதிகள், இவ்வழக்கின் விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
source: ns7.tv