source: ns7.tv
45 ஆண்டுகளாக ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த சென்னை ராயபுரம் ஐந்து ரூபாய் மருத்துவர் ஜெயசந்திரன் காலமானார் அவருக்கு வயது 71.
ஐந்து ரூபாய் கையில் இருந்தால் என்ன செய்யமுடியும்? ஒரு மாங்காய், தேங்காய் கூட வாங்க முடியாது என்கிறீர்களா. உண்மைதான் எதையும் வாங்க முடியாவிட்டாலும், தரமான மருத்துவ சிகிச்சைப் பெற முடியும் என்றால் நம்ப முடிகிறதா?
இவ்வளவு ஏன் நேற்று வெளியான ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த அறிக்கையில் ஜெயலலிதாவின் மருத்துவ செலவு சுமார் 6.50 கோடிக்கு மேல் எனவும் அதில் ஜெயலலிதா உணவுக்கு செலவிடப்பட்ட தொகை மட்டும் சுமார் ரூ.1.17 கோடி என அதிர்ச்சிகரமான தகவல் அறிக்கையில் கூறப்பட்டியிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பலராலும் விமர்ச்சிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற மருத்துவர் கடந்த 45 ஆண்டுகளாக ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். மெர்சல் படத்தில் ஐந்து ரூபாய் கட்டணம் மட்டும் வாங்கும் மருத்துவராக நடித்திருப்பார் நடிகர் விஜய். சினிமாவில் மட்டுமே இது சாத்தியம். நிஜத்தில் சாத்தியமில்லை என படத்தைப் பார்த்தவர்கள் பலர் விமர்சித்தனர்.
ஆனால், அவர்களது விமர்சனங்களைப் பொய்யாக்கி கடந்த 45 ஆண்டுகளாக மிகக் குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்து பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்று வந்தவர் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெயச்சந்திரன். இன்று காலை அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.