வியாழன், 13 டிசம்பர், 2018

Smart City திட்டத்தின் கீழ் மாற்றம் பெறும் சேலம் பழைய பேருந்து நிலையம்! December 13, 2018

Image

Smart Cityதிட்டத்தின் கீழ் சேலம் மாநகரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் இரட்டை அடுக்கு பேருந்து நிலையமாக மாற்றம் பெறுகிறது. இதற்கான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தின் 5வது பெரிய நகராக திகழும் சேலம் மாநகர் போஸ் மைதானத்தில் பழைய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இங்கிருந்து நகரப் பேருந்துகளும், புறநகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஆனால் கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, வெளியூர் பேருந்துகளை இயக்க புதிய பேருந்து நிலையம் சொர்ணபுரி பகுதியில் தொடங்கப்பட்டது.
தற்போது இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பழைய பேருந்து நிலையம் இடநெருக்கடியால் சிக்கி தவிக்கின்றது. இந்நிலையில், SmartCity திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் சுமார் ரூ. 92 கோடி மதிப்பில் அதிநவீன இரட்டை அடுக்கு பேருந்து நிலையமாக அமைக்கப்பட உள்ளதாக கூறுகிறார் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ்.
பேருந்து நிலையம் உள்ளிட்ட ரூ.198.85 கோடி மதிப்பிலான SmartCity திட்டப் பணிகளை இன்று சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். புதியதாக அமையவுள்ள இரட்டை அடுக்கு பேருந்து நிலையத்தின் மாதிரி தற்போது தயார்
செய்யப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க சூரிய ஒளி சக்தியில் சோலார் இயங்கும் வகையில் இந்த பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு முதல் மற்றும் 2-வது தளங்களில் பேருந்துகள் நிற்பதற்கும், அங்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு லிப்ட் வசதியும் அமைய உள்ளது. மேலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நவீன பாதுகாப்பு அறைகள், வணிகக் கடைகள், மொட்டை மாடி உணவகம், கீழ் தளத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகளுடன் அமைய உள்ளது.
இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பது சேலம்
பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன. மேலும் ஆனந்தா இறக்கம் பகுதியில் ரூ.7.90 கோடி மதிப்பில் அடுக்குமாடி வாகன நிறுத்தம், ரூ.4.30 கோடி மதிப்பில் நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையமும் அமைய உள்ளது.
source: ns7.tv