source: ns7.tv
உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி கிடைத்துள்ளது என, ஐ.நா-வின் முன்னாள் சுகாதார செயலாளர் சில்வியா மேத்வ்ஸ் புர்வெலின் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செய்திகளை உலகறியச் செய்யும் செய்தியாளர்களுக்கு, கழிப்பறை வசதி சாத்தியமாகி உள்ளதா என்பதை தற்போது பார்க்கலாம்.
நிகழ்வுகளை களத்தில் இருந்து நேரடியாகவும் துல்லியமாகவும் வழங்குபவர்கள் செய்தியாளர்கள், இங்கு பெண் செய்தியாளர்களுக்கு அடிப்படை தேவையான கழிப்பறைகள் களத்தில் உள்ளதா என கள ஆய்வில் பார்க்கலாம்.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை... சென்னையில் அதிகப்படியான பேரணிகள் போராட்டங்கள் நடைபெறும் இடம் இது தான். இதனால் இங்கு எப்போதுமே செய்தியாளர் கூட்டமும் இருக்கும். ஆனால், பெண் செய்தியாளர்களுக்கென இங்கு எந்த கழிப்பறை வசதியும் இல்லை. இதைத் தாண்டி, அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள் என பல இடங்களிலும், பெண் செய்தியாளர்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை என்பது சற்று கசப்பான உண்மையே. போயஸ் கார்டன், பசுமை வழிச்சாலை, கோபாலபுரம் இல்லம், ஸ்டாலின் இல்லம், டிடிவி தினகரன் இல்லம், கமல் அலுவலகம், ஆளுநர் மாளிகை, அதிமுக அலுவலகம், வள்ளுவர் கோட்டம், ஆட்சியர் அலுவலகம், ராஜரத்தினம் மைதானம் போன்ற இடங்களில் அடிக்கடி செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கென, குறிப்பாக பெண் செய்தியாளர்களுக்கென தற்காலிக கழிப்பறைகள் கூட வைக்கப்படுவதில்லை.
பேரணிகள் போராட்டங்கள் மட்டுமல்ல, அரசியல் நிகழ்வுகள் போது அரசியல் தலைவர்களின் வீடுகள் முன்பு அதிக நேரம் காத்து இருக்கும் நிலை உள்ளது, அங்கும் கழிப்பறைகள் இல்லை.
கட்சி அலுவலகங்களில் பெண்களுக்கான கழிப்பறைகள் உள்ளன. ஆனால் அந்த அலுவலகங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அதனை பயன்படுத்த, பெண் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அடிப்படை தேவைக்குக் கூட அங்கு அனுமதிப்பது இல்லை என்பதே பெண் செய்தியாளர்களின் ஆதங்கமாக உள்ளது.
ஆர்பாட்டம், போராட்டம் என செய்தி சேகரிக்கச் செல்லும் இடங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுவது பெண் செய்தியாளர்களுக்கு பழகிப் போய்விட்டதாக கூறுகிறார் செய்தியாளர் கேத்தரின். அரசு அலுவலகங்களில் கூட பெண் செய்தியாளர்களுக்கென தனி கழிப்பறை வசதி கிடையாது என்ற ஆதங்கத்தையும் அவர் பதிவுசெய்தார்.
பெண் காவலர்கள் பாதுகாப்புக்குச் செல்லும் இடங்களில் கழிப்பறை வசதி இல்லை... பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை... பொது கழிப்பிடங்கள் சரிவர பாரமரிக்கப்படுவதில்லை என, பலவகைகளில் செய்திகளை சேகரித்து வெளியிடும் செய்தியாளர்களுக்கே, கழிப்பறை வசதி என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.
When women reports, she reports in a different way என்ற வாசகம் பத்திரிக்கை துறையில் பிரபலமானது, பெண் செய்தியாளர்களின் குறைந்தபட்ச தேவையான கழிப்பறை வசதியை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் உணர வேண்டும்.