புதன், 12 டிசம்பர், 2018

தெலங்கானாவின் முதலமைச்சராக 2 வது முறையாக பதவி ஏற்கிறார் சந்திரசேகர்ராவ்! December 12, 2018

source: ns7.tv

Image

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள தெலங்கான ராஷ்டிரிய சமிதி எம்ல்ஏக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது.
தெலங்கானாவில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 63 தொகுதிகளில் வெற்றி பெற்று சந்திர சேகர ராவ் ஆட்சியமைத்தார். அவரது ஆட்சி முடிவதற்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், முன்கூட்டியே ஆட்சியை கலைத்து, தேர்தலை சந்திக்க சந்திரசேகர ராவ் முன் வந்தார். அதன்படி மற்ற மாநில தேர்தல்களுடன் சேர்த்து, தெலங்கானாவுக்கும் தேர்தல் நடைபெற்றது. இங்கு தெலங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி தனித்தும், தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியமைத்தும், பாஜக தனித்தும் களம் கண்டன. இந்த மாநிலத்தில் கடந்த 7ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில், ஆட்சியமைக்க 60 தொகுதிகள் தேவையென்ற நிலையில், 87 தொகுதிகளை தெலங்கானா ராஷ்டிரீய சமிதி கைப்பற்றி  உள்ளது. கஜ்வால் தொகுதியில் போட்டியிட்ட தெலங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பெரிதும் எதிர்பாரக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது
இதனிடையே தெலங்கானா எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சந்திரசேகரராவ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ஓரிரு நாட்களில் அவர் முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில், தெலங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி, 63 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலில் அந்த கட்சி 88 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. முந்தையை தேர்தலை விட 15 தொகுதிகளை சந்திர சேகர ராவ் கூடுதலாக கைப்பற்றியுள்ளார்.
இந்த மாநிலத்தில், 2014 தேர்தலில் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போதையை தேர்தலில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட காங்கிரஸ் தற்போது 2 தொகுதிகளை இழந்துள்ளது. இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, இந்த முறை 1 தொகுதியை மட்டுமே வென்றுள்ளது.