source:ns7.tv
நூற்றாண்டைக் கடந்து கடல் பரப்பில் ரயிலைச் சுமந்து சென்று கொண்டிருந்த, பாம்பன் ரயில் பாலத்திற்கு முதன் முறையாக நீண்ட ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு, பாலத்தின் மீது கப்பல் மோதிய போது, 7 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது காலவரையின்றி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கடல் நடுவே 144 தூண்களோடு சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மிக்கவைக்கும் வகையில் காட்சியளிக்கும் பாம்பன் பாலம், ராமேஸ்வரம் தீவை இராமநாதபுரம் மாவட்டத்துடன் இணைக்கும் இணைப்பு பாலமாக விளங்குகிறது. 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பிப்ரவரி 24-ம் தேதி, இந்தப் பாலத்தின் வழியாக முதன் முதலாக ரயில் சேவை தொடங்கியது.
சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை ரயிலில் பயணம் செய்து, பின்பு தனுஷ்கோடி முதல் தலைமன்னாருக்கு சிறு கப்பல் மூலம் பயணித்து அங்கிருந்து மீண்டும் கொழும்புக்கு ரயில் மூலம் பயணம் செய்யலாம். இதை போட் மெயில் சேவை என ஆங்கிலேயர் அழைத்தனர்.
1964-ம் ஆண்டு தனுஷ்கோடியை புயல் தாக்கியபோது இப்பாலம் சேதமடைந்தது. 45 நாட்கள் பராமரிப்புக்குப் பின் மீண்டும் பாலம் திறக்கப்பட்டது. 2007-ல் மதுரை- ராமேஸ்வரம் அகல ரயில் பாதை அமைத்த போது ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி, இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மோதியதில் ரயில் பாலம் சேதமடைந்தது. அந்தச் சேதத்தை சரி செய்வதற்காக அப்போது 7 நாட்கள் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி படகுகள் கடந்து செல்வதற்காக பாம்பன் ரயில் தூக்குப் பாலம் தூக்கப் பட்டபோது தூக்குபாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரத்துக்கு வந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து இதுவரை புறப்பபட்டுவந்த அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மண்டபம் வரும் பயணிகளும் சாலை மேம்பாலம் வழியாக ராமேஸ்வரம் செல்ல சிறப்பு பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் எத்தனை நாட்களுக்குப் பின் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை தொடங்கப்படும் என, மதுரை கோட்ட மேலாளர் நீனு-விடம் கேட்டதற்கு, இந்த மாத இறுதிக்குள் பாலத்தின் பராமரிப்பு பணி முடிவடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால் ரயில் சேவை எப்போது தொடங்கும் என்பதை தற்போது உறுதியாக சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.