source ns7.tv
விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கண்டித்து, 8 மாவட்டங்களில், கடந்த 17ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் வரும் 3-ம் தேதி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து பேரணியாக சென்று, சட்டப்பேரவையை முற்றுகையிட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த காத்திருப்பு போராட்டம், மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை, விவசாயிகள் தற்காலிமாக வாபஸ் பெற்றுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை நடத்த தயார், என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
பள்ளிபாளையத்தில் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தொடங்கப்பட்ட உயர்மின் கோபுர திட்ட பணிகள், ஆந்திர மாநிலம் வரை முடிவடைந்துள்ளது என்றும், தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள், விவசாயிகளிடம் தவறான தகவல்களை கூறி, இத்திட்டத்துக்கு தடையாக உள்ளதாக தங்கமணி கூறினார்.