source: ns7.tv
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. போக்சோ என அழைக்கப்படும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 18 வயதிற்குட்பட்டவர்கள் சிறார்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் இருந்தது.
இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ், அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் வகையில் திருத்தப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மேலும், விண்வெளிக்கு 3 இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.