புதன், 12 டிசம்பர், 2018

நீண்ட இழுப்பறிக்கு பின்னர் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்! December 12, 2018

Image


source; ns7.tv
மத்தியப் பிரதேசத்தில் அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு, ஆளுநரை இன்று நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் உரிமைக்கோர உள்ளனர்.
மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 28ம் தேதி நடைபெற்றது. இதில், 74.61 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. 
தொடக்கம் முதலே ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.  அறுதிப் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை எனும் நிலையில், அறுதிப் பெரும்பான்மையை பெற இவ்விரு கட்சிகளிடையே நள்ளிரவு வரை இழுபறி நிலை நீடித்தது.
இறுதியில் காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியில் இரந்த பாஜக 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. சுயேட்சைகள் 4 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு இடங்களிலும், சமாஜ்வாதி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இதற்கிடையே, அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் கட்சி உரிமைக்கோர உள்ளது. இதுகுறித்து போபாலில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கமல்நாத், ஜோதிர் ஆதித்யா சிந்தியா, திக் விஜய் சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமல்நாத், ஆளுநரை இன்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் முடிவு தாமதமானதற்கு தேர்தல் ஆணையம் காரணமல்ல என ஜோதிர் ஆதித்யா சிந்தியா, நியூஸ் 7 தமிழிடம் தெரிவித்தார். மேலும் யார் முதல்வர் என்பது குறித்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தியே தான் முடிவு செய்வார் எனவும் தெரிவித்தார்.