source; ns7.tv
வங்கக் கடலில் உருவான பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா-ஏனாம் இடையே இன்று பிற்பகல் கரையை கடந்தது.
புயல் கரையை கடந்தபோது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் எதிரொலியாக காலை முதலே காக்கிநாடா கடற்கரை பகுதியில் சூறைக் காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. புயல் கரையை கடந்த நிலையில் காக்கிநாடா, ஏனாம், மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என விஜயவாடா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவில் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஓங்கோல், குண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் 50 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.