source: ns7.tv
தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள பெய்ட்டி புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், சென்னைக்கு 430 கிலோ மீட்டர் தொலைவில் பெய்ட்டி புயல் நிலை கொண்டிருப்பதாகவும், அது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்வதாகவும் கூறினார். இந்த புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டிணம் மற்றும் காக்கிநாடா இடையே நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய பாலச்சந்திரன், அப்போது, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவித்தார்.
இந்த புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்ட அவர், இன்றும், நாளையும் மீனவர்கள் தென் மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். அதேநேரத்தில், இந்த புயலால் தமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.