ஞாயிறு, 23 டிசம்பர், 2018

தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் என்ன? December 23, 2018

source: ns7.tv
சென்னை மெரினாவில் 13வயது சிறுமி குதிரை ஓட்டும் நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் என்ன?
டெல்லியில் வங்கியில் வேலை செய்து வந்த பெண் ஒருவர், பணி உயர்வு பெற்று தமிழகத்தில் உள்ள கும்பகோணத்தில் வந்து இறங்குகிறார். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் இருக்கும் என்ற அந்த பெண்ணின் மீது பேரிடி விழுகிறது. அந்த பெண் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். வெளியூர்களில் இருந்து வேலைக்காக சென்னைக்கு வந்து தங்கியிருக்கும் பெண்களின் விடுதிகளில் ரகசிய கேமரா வைத்து, அவர்களின் அந்தரங்களை படம்பிடித்து ரசித்ததாக ஒருவர் கைது செய்யப்படுகிறார். 
மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை, பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த மெரினா கடற்கரையிலிருந்து கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்ததாக குதிரை ஓட்டுநரை போலீஸ் கைது செய்கிறது. இந்த கதை இத்துடன் முடிந்து விடவில்லை. காதலனுடன் சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை. பெற்ற மகளையே குடித்துவிட்டு பாலியல் சித்ரவதை செய்யும் தந்தை. நம் தமிழகத்திற்கு என்ன தான் ஆயிற்று? சுதந்திரமாக இருந்த பெண்கள், சமீப காலமாக மீண்டும் வீட்டுக்குள் முடங்கும் அவலம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சோகம். பிள்ளைப் பிராயத்திலிருந்து தமிழ் அணங்கு என்று கேட்டு வளர்ந்த தமிழ் தாய் வாழ்த்துப் பாடலை மீறியும், பெண்களை நாம் ஏன் போகப்பொருளாக மாற்றிவிட்டோம்?   
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறதா? என்பதை ஆராயும் முன், ஆண்களுக்கு ஏன் இதுபோன்ற தவறான புத்தி சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்பதை பார்க்க வேண்டியுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளம் முதல், மின் ஊடகங்கள் வரை எங்குமே பாலியல் தொடர்பான செய்திகள் கொட்டிக்கிடப்பதே, அதற்கான காரணமாக அமைந்துள்ளது. பாலியல் சீண்டல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள, பெண்களுக்கு பாடம் நடத்தும் சமூகமாகவே நாம் மாறிவிட்டோம். இந்த சூழலில், குழந்தை பிராயம் முதல், பெண்களை வீட்டில் அடைத்து அடைத்து வளர்ப்பதை விட, பெண் என்றால் யார் என்பதை ஆண் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய சூழலும் காலத்தின் நிர்பந்தமாகியுள்ளது. 
பாலியல் தொடர்பான தவறான உணர்வு, ஆபாச படங்களை பார்த்தல் என்பதிலிருந்து தொடங்கி, பெண்களை தவறாக பார்த்தலில் இரண்டாம் நிலையை அடைகிறது. மூன்றாம் நிலையை அடையும் ஆண், பாலியல் குற்றங்களை செய்பவனாக மாறிவிடுகிறான். இது ஒருவகையான மனநோய் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த மனநோயைப் போக்குவது அரசுக்கு மட்டும் அல்ல, நம் ஒவ்வொருவருக்குமே அவசியமானதாகவும் பார்க்க வேண்டும். 
பெண்களை பாதுகாப்பற்ற சமூகமாக மாற்றியுள்ள இந்த சமூகம், தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் நாட்டுக்கே இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறுவிடும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். ஒவ்வொரு ஆணும் குழந்தைப் பருவத்தில் இருந்தே, சகோதரி, தாய், பெண் தோழிகளுடனே அதிகநேரம் செலவழித்தால், மற்ற பெண்களின் உணர்வுகளை அதிகம் புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. அதைவிட, பெண்களை ஒரு பொருளாகவே பார்க்கும் மனநிலை எப்போது ஆண்கள் எண்ணத்தில் இருந்து பொசுக்கப்படுகிறறோ அன்றுதான் பெண்களுக்கான சுதந்திரம் உறுதிசெய்யப்படும்