வெள்ளி, 14 டிசம்பர், 2018

தெலங்கானாவில் அமையப்போவது கிரிமினல் ராஜ்ஜியமா ? December 14, 2018

Image

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்லியைச் சேர்ந்த ஏ.டி.ஆர். என்ற அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதில் 47 எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிராக குற்றம் போன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகியுள்ளது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் 88 எம்.எல்.ஏ.க்களில் 50 எம்.எல்.ஏ.க்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2014ம் ஆண்டு குற்றப்பின்னணியானது 56 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 61 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் சொத்துக்கள் கடந்த 2014ம் ஆண்டு இருந்ததை விட இருமடங்கு உயர்ந்துள்ளதாகவும் தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜகோபால் ரெட்டியின் சொத்து மதிப்பு 314 கோடி என்றும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ., மாரி ஜனார்தன் ரெட்டிக்கு 161 கோடி மதிப்பிலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., உபந்தர் ரெட்டிக்கு 91 கோடி மதிப்பிலும் சொத்துகள் உள்ளதும் தெரியவந்ததுள்ளது. 

source: ns7.tv